
மத்திய மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றமா?
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மலைநாட்டுப் புவியியலில் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று நில அளவையாளர் நாயகம் என்.கே.யு. ரோஹன தெரிவித்துள்ளார்.
பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மறுவரை படமாக்கல் அவசியமாகிறது. துல்லியமான மறுவரை படமாக்கல் செயல்முறையை ஆதரிக்கும் வகையில், இலங்கையைச் சுற்றிவரும் விண்வெளி நிலையங்களில் இருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பெற நில அளவைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய படங்கள், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும், நதிப் படுகைகள், நிலங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் உதவும்.
“சேதம் பெரும்பாலும் புவியியல் நிலப்பரப்பில்தான் ஏற்பட்டுள்ளது. வெளிப்புறப் பகுதிகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை, ஆனால் சில பகுதிகளில் மீள்குடியேற்றம் தேவைப்படலாம்” என ரோஹன கூறியுள்ளார்.
அனர்த்த நிலை சீரடைந்து, ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன், விரிவான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது ஒரு முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை செயற்கைக்கோள் படங்கள் இலவசமாகக் கிடைத்தாலும், உயர்தரமான, நெருக்கமான படங்களைப் பெற கணிசமானளவு நிதி தேவைப்படுகிறது.
திணைக்களம் ஏற்கெனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் இருந்து குறைந்த தெளிவுத்திறன் கொண்ட பல படங்களைச் சேகரித்துள்ளதுடன், ஆரம்பக் கட்ட ஆய்வுகளையும் தொடங்கியுள்ளது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பெறுவதற்காக இராஜதந்திர வழிகள் மூலம் சர்வதேச உதவியையும் நில அளவைத் திணைக்களம் நாடியுள்ளது.
சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் சீனா ஏற்கெனவே வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சில நெருக்கமான படங்களை வழங்கியுள்ளது.
நிலைமை சீரடைந்தவுடன் அனைத்து வரைபடமாக்கலும் செய்யப்படும். விரைவான புனரமைப்பு நடந்து வருகிறது, சில பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீர் வடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் செயற்கைக்கோள் படங்களை ஏற்கெனவே எடுத்து, வரைபடமாக்கலைத் தொடங்கியுள்ளதாகவும், தேசிய வரைபடமாக்கல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கையின் ஒரு புதிய தேசிய அளவிலான வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் நில அளவையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
