இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு 

இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு 

கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) புதிய புவியியல் பகுப்பாய்வு இதனை தெரிவித்துள்ளது.

பேரிடன் போது, வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமான பகுதியை (நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை) மூழ்கடித்து வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பேரிடர் தொடர்பான தரவுகளிலிருந்து பெறப்பட்ட இந்த பகுப்பாய்வு, பல தசாப்தங்களில் இலங்கையைத் தாக்கிய மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், சூறாவளிக்கு முன்பே பல பாதிப்புகளை எதிர்கொண்ட வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

நிலையற்ற வருமானம், அதிக கடன் மற்றும் பேரழிவுகளைச் சமாளிக்கும் திறன் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், மிதமான அதிர்ச்சிகள் கூட நீண்டகால பின்னடைவுகளாக மாறக்கூடும்.

வெள்ள நீர் கிட்டத்தட்ட 720,000 கட்டிடங்களை அடைந்துள்ளது. இது இலங்கையில் உள்ளட்ட கட்டிடங்களில் 12க்கு ஒரு கட்டிடம் என்ற ரீதியில் வெள்ள நீர் அடைந்துள்ளது.

நாட்டின் கடற்கரையை பன்னிரண்டு முறைக்கு மேல் சுற்றி வர போதுமான 16,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

அதேபோல், 278 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மற்றும் 480 பாலங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள்தொகையில் தோராயமாக 1.2 மில்லியன் பெண்கள், 522,000 குழந்தைகள் மற்றும் 263,000 முதியவர்கள்  அடங்குவார்கள்.  மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மாவட்டங்களில் (கொழும்பு மற்றும் கம்பஹா) வசிக்கின்றனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலர் அதிக ஆபத்துள்ள, பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழ்கின்றனர், இதற்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது.

“அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதிக பாதிப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்தால், மீட்பு பணிகள் மொதுவாகவும் அதிக செலவை ஏற்படுத்துபவையான இருக்கும்.

எனவே, இந்த இடங்களில் ஆரம்பகால நடவடிக்கை மிகவும் முக்கியமானது” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  அசுசா குபோடா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )