
பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியாலைக்கு அனில் ஜாசிங்க விஜயம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க விஜயம் மேற்கொண்டார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா இசியோமாட்டா மற்றும் தற்போது நாட்டில் உள்ள ஜப்பானிய அவசர பேரிடர் மருத்துவக் குழுவின் மூத்த உறுப்பினர்களும் அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய இந்த விஜயத்தில் இணைந்துக்கொண்டனர்.
ஆய்வின் போது, வெளிநோயாளர் பிரிவு, வைத்தியசாலைகள், வார்டுகள், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, சமையலறை, மருத்துவக் கடைகள், அறுவை சிகிச்சை வளாகம், இரத்த வங்கி, எக்ஸ்ரே மற்றும் சிடி உள்ளிட்ட கதிரியக்கவியல் பிரிவுகள், வைத்தியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் தாதியர் விடுதி வசதிகள் உள்ளிட்ட வைத்தியசாலையின் அனைத்து முக்கிய பிரிவுகளையும் குழு பார்வையிட்டது.
அவதானிப்புகளைத் தொடர்ந்து, படிப்படியாக சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் டொக்டர் ஜாசிங்க கலந்துரையாடினார்.
அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் வழங்கும் நன்கொடைகளை நிர்வகிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும் புதிய கட்டுமானம் உண்மையான வைத்தியசாலை தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
நகரத்திற்குள் ஏழரை ஏக்கரில் அமைந்துள்ள சிலாபம் மாவட்ட வைத்தியசாலை, புத்தளம் மாவட்டத்தில் உள்ள முக்கிய அரச வைத்தியசாலையாகும்.
இந்த வைத்தியசாலையில் சுமார் 1,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
