
அனர்த்த நிவாரணங்களுக்காக நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்
நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் “சுரக்” அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த நிவாரணக் குழுக்கள் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,041 பாதுகாப்பு நிலையங்களை மையமாக வைத்து இந்த மருத்துவக் குழுக்கள் தமது சேவைகளை வழங்கி வருவதாகச் சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமும், அனர்த்த முகாமைத்துவ தேசிய இணைப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் சமித்தி சமரகோன் தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய அனைத்து உதவி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படும் மருத்துவக் குழுக்கள், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் 98.3% ஆனோரைப் பரிசோதித்து முடித்துள்ளதாகவும், தேவைக்கேற்ப மருந்துகளை வழங்கி மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை உரிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, குறிப்பிட்ட இடங்கள் அல்லது கிராமங்களுக்கு மேலும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படின், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கமான 1926 இற்கு நாளின் 24 மணித்தியாலமும் அழைக்க முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் சுட்டிக்காட்டினார்.
