
தந்திரிமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி சாதாரண மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பகுதியில் 125 மில்லி மீட்டருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஏனைய பல பிரதேசங்களில் சாதாரண மழைவீழ்ச்சியே பெய்துள்ளதாகவும், நீர் தேங்கங்களின் நீர்மட்டங்களில் பெரிய அதிகரிப்பைக் காட்டவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
