திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் நாளை –  பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் நாளை – பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு, நாளை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாப்படும்.

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

முக்கிய நிகழ்வாக கார்த்திகை நாளில் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள, 2,668 அடி உயர மலை உச்சியில் மெகா கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி நாளை மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

300 கிலோ நிறையுடை கொண்ட கொப்பரை இன்று அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்துக்காக 1500 மீற்றர் திரி, 4500 கிலோ கிராம் நெய் ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டது. நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபம் ஏற்றும் நிகழ்வை காண பக்தர்கள் விரதமிருந்து, மலை ஏறி சென்று வழிபடுவது வழக்கம்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மகா தீபத்தை காண திருவண்ணாமலை செல்வார்கள் . இதற்கிடையே தான் இந்த முறை பக்தர்கள் மலையேற தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த மலையில் மண் சரிவு ஏற்பட்டு 07 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போதும் மழைக்காலம் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )