
பிரித்தானியாவில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்
மாவீரர் நாள் இன்று இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர்.
பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
மாவீரர் நாளை அனுஷ்டிக்க இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதிக்க முடியாதென திட்டவட்டமாக நிராகரித்திருந்தது.
என்றாலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என அனுமதித்துள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இளையோர் தமிழ் அமைப்பாளர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் நிகழ்வு EXCEL மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட உள்ளதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கத்திடம் முன்வைக்ன புலம்பெயர் ஈழத் தமிழர்கள் தீர்மானித்துள்ளனர்.
‘‘போரில் தமிழ் இனம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 16ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னமும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பிரித்தானிய அரசாங்கம் ஐ.நா சபையில் தமிழ் இனப்படுகொலைக்கான நீதியை நிலைநாட்டும் பயணத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். பிரித்தானியா உட்பட பல வல்லரசு நாடுகள் இந்த விடயத்தில் கைகோர்க்கும் போதுதான் தாமதிக்கப்பட்ட நீதியேனும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும்.‘‘ என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பல்வேறு கோரிக்கைகளை விரைவில் பிரித்தானிய அரசாங்கத்திடம் முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் இதில் கலந்துகொண்ட தமிழர்கள் தெரிவித்தனர்.
