
”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார்.
விஜய் மீது சீமான் அட்டாக்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அப்போது ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசுகையில், “திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து பேசினார்.
இறுதியாக விஜயையும், அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தையும் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். அதன்படி சீமான் பேசுகையில், “நீங்கள் கூட்டத்தை பார்க்கிறீர்கள் அது கூடும், கலையும்.
ஆனால் என் கூட்டம் கூடும் ஆனால் கலையாது. ஏனென்றால் நான் கட்டுவது கொள்கை கோட்டை. குட்டிச்சுவர் அல்ல. ஒரு வழக்கு போட்டதும் யார் எங்கு? சென்றார்கள் என்றே தெரியவில்லை. கட்சியே தலைமறைவாகிவிட்டது. 260 வழக்குகள் போட்ட பிறகும் இன்றும் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.
விஜயின் வாக்குறுதியை விமர்சித்த சீமான்
தயவு செய்து என்னை கைது செய்யுங்கள் என இந்திய மண்ணில் கெஞ்சும் ஒரே தலைவன் நான் மட்டும் தான். சிவானின் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால், சீமானின் ஆட்டத்தை இந்த முறை களத்தில் காண்பீர்கள்.
இவனை மாதிரி பிக்காலி பயனா நான். மோட்டர் பைக் தருகிறேன், கார் தருகிறேன் என்கிறார்கள். பெட்ரோல் யார் தருவான்? வீட்டுக்கு ஒரு கார் தருவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு, அம்பேத்கர் புகைப்படத்தை அனுப்புவேன்.
கேட்டால் உலகிலேயே சிறந்த கார் அம்பேத்கர் என நான் நகைச்சுவையாக சொன்னதை இவர்கள் உண்மையாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சோறு இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்க கார் தருகிறார்களாம். நான் ஆட்சி அமைப்பேன். இல்லையென்றால் நான் இல்லாமல் எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது” என சீமான் சூளுரைத்துள்ளார்.
விஜய் புதியதாக அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்ததும், முதல் ஆளாக சீமான் ஆதரவு தெரிவித்தார். ஆனால், தமிழ் தேசியத்திற்கு மாறாக திராவிட கொள்கைகளை பின்புலமாக கொண்டு செயல்பட உள்ளதாக விஜய் அறிவித்தது முதலே, சீமான் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார். விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக சீமான் விமர்சித்துள்ளார். அந்தவகையில் தான் அண்மையில் காஞ்சிபுரத்தில் பேசும்போது, வீட்டிற்கு ஒரு பைக் நிச்சயம், கார் லட்சியம் என விஜய் பேசியிருந்தார். அதனை தற்போது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
