
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் புறக்கணிப்பு – சபையில் ஹர்ஷ டி சில்வா காட்டம்
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வலைத்தளத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வலைத்தளத்தில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் புகைப்படங்கள் உள்ளன. மேலும், நடத்தப்பட்ட மாநாடுகள் தொடர்பான புகைப்படங்களும் உள்ளன.
ஆனால், அமைச்சின் இலக்குகள் குறித்து சிங்களம் மற்றும் தமிழில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு வலைத்தளத்திலும் மூன்று மொழிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது.
அதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமைச்சு என்ன செய்கின்றது என்பது குறித்து நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறெனில், நாட்டு மக்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறித்து எவ்வாறு புரிந்துகொள்வார்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
