
தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி – புயலாக வலுப்பெறக்கூடும்
அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி எதிர்வரும் 27ஆம் திகதி புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30ஆம் திகதி வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:
“மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று குமரிக்கடல், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல்
பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதுதவிர, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த 03 சுழற்சிகளும் ஒன்றாக இணைந்து நகர வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் 30 ஆம் திகதி வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
