கனடா, சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி காலி மற்றும் நிக்கவரெட்டிய பகுதிகளை சேர்ந்த 04 பேரிடம் தலா 13 மில்லியன் ரூபாய் வீதம் 52 மில்லியன் ரூபாய் பணத்தை சந்தேக நபர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் வழங்கப்பட்ட அவர் தொழில் பெற்றுக்கொடுக்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சுவிட்சர்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 13 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாசாலை ஒன்றில் வரவேற்பு பிரிவில் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தினமும் முறைப்பாடுகள் கிடைப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 011 288 22 28 என்ற இலக்கத்தினூடாக அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
