தபால் திணைக்களம் நவீனமயப்படுத்த திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
இலங்கை தபால் திணைக்களம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, திறமையான மற்றும் நம்பகமான தபால் சேவையை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தபால் தலைமையகத்தின் தற்போதைய சேவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்தார்.
இலங்கை தபால் திணைக்களத்தினால் தற்போது வழங்கப்படும் சேவைகள், தற்போதைய திட்டங்கள், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள், தற்போதைய சவால்கள், பிரச்சினைகள் மற்றும் இலங்கை தபால் முகங்கொடுக்கும் ஏனைய பிரச்சினைகள் குறித்து இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை தபால் திணைக்களம் சரியான நோக்கத்துடனும் திட்டத்துடனும் செயற்படுவதாகத் தோன்றுவதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து இந்த வரலாற்று சேவையை தேசிய சேவையாக நவீனப்படுத்தி பேணுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
குறிப்பாக அரசியல் அல்லது தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் புதிய தபால் நிலையங்களை நிறுவுவது எதிர்காலத்தில் இடம்பெறாது. தபால் திணைக்களத்தின் எதிர்காலத் திட்டங்களை குறைந்தபட்சம் அடுத்த 10 வருடங்களை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். திணைக்களம் தொடர்பான திட்டமொன்றை உரிய புரிந்துணர்வுடன் செயற்படுத்துவதுடன், அதற்காக திணைக்களம் தயார்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தபால் திணைக்களத்தை சுற்றுலாத் துறையுடன் இணைந்து நவீனமயப்படுத்தினால் இலாபகரமான திணைக்களமாக மாற்றலாம் எனவும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் திட்டமிடப்பட்ட முன்மொழிவை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், திணைக்களத்தின் வருமான ஆதாரங்கள் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும், திணைக்களத்திற்கு வருமானம் ஈட்டக்கூடிய பல பகுதிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சில பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளுக்கு அளிக்கப்படும் கவனம் போதுமானதாக இல்லை என்றும் கூறிய அமைச்சர், சேவைகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும், திணைக்களத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் சிசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார, பிரதி தபால்மா அதிபர் எச்.எம்.பிரேமச்சந்திர ஹேரத், பிரதி தபால் மா அதிபர் ஜி.சி.ஐ. டி சில்வா, பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ, தபால் திணைக்கள அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.