350 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

350 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நேரத்தில் 350 வகையான மருந்துகளின் விலையை பாரியளவில் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் ஊடாக நாட்டின் சந்தையில் பல மருந்துப் பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனம் (SPMC) சந்தையில் புதிதாக பல மருந்து வகைகளை அறிமுகம் செய்த நிகழ்வின் ஆரம்ப மருந்துத் தொகுதிகளை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 2015ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் (National Drug Regulatory Authority Act) கீழ் மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அந்த அதிகாரசபைக்கு உள்ளது என்றார். இந்த ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் 2016ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், 2023ஆம் ஆண்டில் மருந்து இறக்குமதி நிறுவனங்களின் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விலைக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றார்.

இந்தச் சூழ்நிலையில், தனியார் மருந்து விற்பனையாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூட எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதிக விலைகளை அறவிடுவதாக அவதானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமைக்குத் தீர்வாக, மருந்து விலையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டதுடன், அது அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, நாட்டில் உள்ள 350 வகையான மருந்துகளுக்கு புதிய விலைகள் இந்த வார ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதாகவும், இது குறித்து மருந்து வழங்குநர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் மேலும் 200 வகையான மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சிறுவர் நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உட்பட பல நோய்களுக்கு வழங்கப்படும் 350 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என வலியுறுத்திய அமைச்சர், உதாரணமாக, விலைக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டதன் மூலம், இதுவரை சுமார் ரூ. 42,000 இற்கு விற்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கான (Paclitaxel (Protein bound particles) for injectable suspension 100mg/vial) ஊசி மருந்து ரூ. 26,332 ஆகவும், பக்கவாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 6,348 பெறுமதியான (Nimodipine IV Infusion BP 10mg/50ml) மருந்து ரூ. 4,100 வரையிலும் குறையும் என்று தெரிவித்தார்.

மருந்துகளின் விலை உயர்வின் காரணமாக சில நோயாளிகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சரியான மருந்து அளவை வாங்கத் தயங்குவதாகவும், இவ்வாறு மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு நிர்ணயம் செய்வதன் மூலம் மக்களுக்குச் சரியான மருந்து அளவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைக்கு சர்வதேச தரத்திற்கு இணங்க, நாட்டுக்குத் தேவையான உயர் தரமான, பாதுகாப்பான மற்றும் செயற்பாடுடைய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கும், மலிவு விலையில் வழங்குவதற்கும் நிறுவப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Manufacturing Corporation – SPMC), இந்த ஆண்டு புதிய மருந்து வகைகளைச் சந்தையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் Celecoxib 200 mg மற்றும் Sitagliptin 100 mg என அழைக்கப்படும் புதிய முதற்கட்ட மருந்து வகைத் தொகுதிகள் இரண்டையும் SPMC இன் தலைவர் பேராசிரியர் ஜயந்த விஜயபண்டார சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார். இந்தச் சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட மருந்துகளில், Celecoxib 200mg ஆனது வீக்கம் சார்ந்த வலிகள், எலும்பு மூட்டு அழற்சி (Osteoarthritis) மற்றும் முடக்கு வாதம் (Rheumatoid arthritis) ஆகியவற்றுக்கு வழங்கப்படுகிறது. இந்த உற்பத்தியின் குறைந்தபட்ச சில்லறை விலை ரூ. 17.60 ஆகும்.

Sitagliptin 100mg மருந்து இரண்டாம் வகை (Type 02) நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மருந்தின் உச்சபட்ச சில்லறை விலை ரூ. 32 ஆகும்.

உயர்தர அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்குள் உற்பத்தி செய்யும் அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனம், மருந்து உற்பத்தி, பதப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், பொதியிடல் மற்றும் மீள் பொதியிடல், தொழில்நுட்ப சிறப்பு அறிவை வழங்குதல், மருந்து ஆராய்ச்சி மற்றும் மருந்து தரப்படுத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி ஹன்சக விஜேமுனி, அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஏ. அத்துரலிய உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This