பிரித்தானிய கடலில் ரஷ்ய உளவு கப்பல் அத்துமீறி பிரவேசம்

பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவுக்கப்பல் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறுகையில், கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ரஷ்ய கப்பல் பிரவேசித்துள்ளது. அந்த கப்பலை எங்களது விமானப்படை விமானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
ஏனென்றால் அது நாட்டின் கடலுக்கடியிலான உட்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இக்கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க கடற்படை போர்க்கப்பலையும் போர் விமானங்களையும் நாங்கள் நிறுத்தியுள்ளோம். இச்சமயம் எங்கள் விமானிகள் மீது ரஷ்ய கப்பல் லேசர்களை செலுத்தி இருக்கிறது.
ரஷ்யாவின் இந்நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. நாங்கள் ரஷ்யாவுக்கும் அதன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் கூறுவது என்னவென்றால், நாங்கள் உங்களைப் பார்க்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். சி.என்.என்.
