பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதுதான் அரசின் இன, மத நல்லிணக்கமா?

திருகோணமலையிலும் திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் இன ஐக்கியத்திற்கும் ஒருபோதும் பங்களிக்காது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், சில தினங்களாக திருகோணமலையில் இடம்பெற்றுவரும் புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு:-
“இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த நாயன்மாரின் தேவாரப் பாடல் பெற்ற புனிதத் தலமாக விளங்குகின்ற திருகோணேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தைச் சுற்றிவளைத்து புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதுடன், பௌத்த நிறுவனங்களை உருவாக்குகின்ற வேலைகளையும் மாறிமாறி வருகின்ற அனைத்து சிங்கள அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மையப்புள்ளியான திருகோணமலையை சுற்றிவளைத்து ஏற்கனவே சேருவாவில என்ற பெயரில் சிங்களத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. மிச்சம் மீதியாக இருக்கின்ற தமிழ்ப் பிரதேசங்களையும் சிங்களமயமாக்குவதனூடாக வடக்கிற்கும் கிழக்கிற்குமான நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்வதென்பது ஒவ்வொரு அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பல தமிழ் கிராமங்கள் முற்றுமுழுதாக சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டமையுடன், இப்பொழுதும் தமிழ், முஸ்லிம் வாழக்கூடிய பிரதேசங்களில் பௌத்த புராதன இடங்கள் என்ற பெயரில் புத்தகோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக தமது இறந்துபோன உறவுகளுக்கு ஈமக்கிரியைகள் செய்யுமிடமான கன்னியா வெந்நீரூற்று என்ற புராதான பகுதியானது பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதனை அவர்களே நிர்வகிப்பதையும் அங்கிருக்கின்ற சைவக் கோயில்களை இடித்தழிக்கும் நிலையையும் காணமுடிகின்றது. இலங்கையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து ஈஸ்வரங்கள் இருந்தன என வரலாறு சொல்கின்றது.
திருகோணமலையில் திருகோணேஸ்வரமும், மன்னாரில் திருக்கேதீஸ்வரமும் பாடல்பெற்ற தலங்களாக இருந்து வருகின்றன. மன்னார் திருக்கேதீஸ்வர முகப்பிலும் தனியார் ஒருவரின் காணியை ஆக்கிரமித்து அங்கு புத்தகோயில் கட்டப்பட்டுள்ளது. அதனைப் போன்றே திருக்கோணேஸ்வரர் கோயிலை அண்மித்த பகுதிகளிலும் புத்தர் சிலைகளாலும் ஏற்கனவே கூறியது போன்று, பௌத்த நிறுவனங்களாலும் அது ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
மிக நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்த சிவாலயங்கள் புனிதப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வரும் வேளையில் அந்த இடங்களை ஆக்கிரமித்து வேறு மத சின்னங்களை உருவாக்குவதென்பது தமிழ் சைவ மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதுடன் அவர்களின் உணர்வுகளுக்கு விரோதமான செயற்பாடாகும். புராதான சின்னங்களை, பகுதிகளை பாதுகாக்க வேண்டிய அரசாங்கங்கள் அவற்றை அழித்தொழித்து அங்கு புதிய புத்தர் ஆலயங்களை உருவாக்குவதென்பது அறிவீனமானது. வரலாற்றை சீர்குலைக்கும் நோக்கத்தையும் கொண்டது. இன்று வந்திருக்கின்ற புதிய இடதுசாரி அரசாங்கத்தினால் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறாது என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியிலும் கட்டியெழுப்பப்பட்டது.
நாங்கள் இனவாதிகள் அல்லர், மதவாதிகள் அல்லர் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் மந்திரம்போல் ஓதி வருகின்றார்கள். ஆனால் இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவே இவர்களும் இருக்கின்றனர். அத்துடன் அதற்குத் துணை போகின்றவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸவும் ஏனைய பல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை பௌத்த நாடு, பௌத்தத்திற்கு முதலிடம் உண்டு, ஆகவே இவற்றுக்கெதிராக பொலிஸாரோ, படையினரோ, அரசாங்கமோ நடவடிக்கைகள் எடுக்கக்கூடாதென நாடாளுமன்றத்தில் கூக்குரலிட்டு வருகின்றனர்.இலங்கை நினைவுப் பொருட்கள்
வடக்கு – கிழக்கு என்பது தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசம். இங்கு 80வீதத்திற்கு மேற்பட்டோர் தமிழ் பேசும் மக்களாகவும் இந்து, இஸ்லாமிய, கிறித்தவ மக்களாகவும் வாழ்கின்றனர். ஆகவே வடக்கு-கிழக்கிலும் பௌத்தத்திற்கு முதலிடம் வேண்டும் என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூற்றுகளும் முற்றுமுழுதாக மதவாதத்தையும் இனவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்கள் காப்பாற்றப்பட வேண்டுமாக இருந்தால், அவர்களின் தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால், அவர்களது மத, இன, கலாச்சார, பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் மதச் சார்பற்ற பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்தமான இன ஐக்கியத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் இது ஒரு முன்னோடி செயலாக அமையும்.
தேர்தல் காலங்களில் தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் செய்வோம் என்று கூறுவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் கடைந்தெடுத்த இனவாத, மதவாதிகளாகச் செயற்படுவதும் அருவருக்கத்தக்க செயலாக நீண்டு செல்கின்றது.
இவை மாற்றி அமைக்கப்பட வேண்டுமாக இருந்தால், சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய முற்போக்கு சக்திகள், இன, மத ஐக்கியத்தை விரும்பக்கூடியவர்கள் வடக்கு – கிழக்கு பிரதேசங்களை மதச்சார்பற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஜயன் வந்தபொழுது இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த ஈஸ்வரங்களை புனிதத் தலங்களாகப் பிரகடனப்படுத்துவதும் முக்கியமானதென நாங்கள் கருதுகின்றோம்.
நாங்கள் இனவாதிகள் அல்லர், மதவாதிகள் அல்லர் என்ற முகமூடியைப் போர்த்திக்கொண்டு சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அநுர அரசாங்கத்தின் திட்டங்களானவை அருவருக்கத்தக்கவையும் கண்டிக்கத்தக்கவையுமாகும்.
வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும், மேற்கிலுமாக நாம் முழு மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டுள்ளோம் என்று கூறிக்கொள்பவர்கள், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக 159 ஆசனங்களைக் கொண்டிருப்பவர்கள், துணிச்சலான முடிவுகளை எடுத்து, இனவாத மதவாதப் போக்குகளிலிருந்து விடுபட்டு இன, மத ஐக்கியத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – என்றுள்ளது.
