மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் நிறுவவும் ஒப்பந்தம் கைச்சாத்து

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்கும் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், அடுத்த ஆண்டுக்குள் தொடங்கி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் பணிபுரியும் மீனவர்களின் பாதுகாப்பையும் தகவல் தொடர்புத் திறனையும் மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பீ. கே. கோலித கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் எஸ். ஜே. கஹாவத்தே மற்றும் JICA துணை இயக்குநர் நோமுரா டெட்சுயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய வானொலி தொடர்பு அலகுகள் மூலம் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி கப்பல்களுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பராமரிக்கும் வசதி உருவாகும். மேலும், கப்பல்களின் இயக்க நிலையை கண்காணித்தல், வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவிப்புகளை வேகமாக வழங்குதல், அவசரநிலைகளில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் ஆகியவை சாத்தியமாகும்.
இந்த மையங்களுக்கு உருவாக்கப்படும் நவீன உட்கட்டமைப்பு, கடலில் ஏற்படும் அவசரநிலைகளுக்கு உடனடி பதிலளிக்கும் திறனை மேம்படுத்தும் என்பதால், மீனவர்களின் உயிர் பாதுகாப்புக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் நம்பகமான மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுவார்கள். மேலும், சட்டவிரோத மீன்பிடித் தடுப்பு, கப்பல் பாதைத் திட்டமிடல் திறன் மேம்பாடு மற்றும் தேசிய அளவிலான மீன்வள மேலாண்மை வலுப்படுத்தல் போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தால் கிடைக்கும் என அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
