பெருந்தோட்ட , வடக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும்

பெருந்தோட்டத் தமிழ் மக்களுக்கும், வடக்குத் தமிழர்களுக்கும் வரலாற்று காலம் முதல் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி எம். பி எஸ்.எம்.மரிக்கார் நேற்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வகையில் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை என்றும் மரிக்கார் எம்பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
”மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ரூ. 200 சம்பள அதிகரிப்பை நாம் எதிர்க்கவில்லை. பெருந்தோட்ட தமிழர்களுக்கும், வடக்குத் தமிழர்களுக்கும் வரலாற்று காலம் முதல் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் உரையாற்றுகிறாரா? என்று எனக்குத் தோன்றியது. அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்று குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் யோசனைகளை வரவு செலவுத் திட்டத்தின் முன்வைத்துள்ளனர்.
தேசிய உற்பத்திகள் அல்லது வெளிநாட்டு முதலீடுகளினால் திறைசேரியின் கையிருப்பு அதிகரிக்கப்படவில்லை. வரிகளையும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரித்து தேசிய கையிருப்பை அதிகரிக்க முடியும். அதேபோல் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல், வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யவும் முடியும்.
