பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’… தடம் தெரியாமல் போன காங். – தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

பிஹாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல, வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி. இதற்கு அடித்தளம் அமைத்த ‘நிமோ (நிதிஷ் – மோடி) மேஜிக்’ பற்றியும் அதனை களத்தில் சாத்தியப்படுத்திய பெண் சக்தி பற்றியும் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய திகதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 6-ம் திகதி 121 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 11-ம் திகதி 122 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 67.13 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகின.
நவ.14 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்னிலை நிலவரத்தில் ஸ்கோர் செய்த என்டிஏ கூட்டணி, அடுத்தடுத்து டாப் கியரில் எகிறி, 200+ தொகுதிகளை வசப்படுத்துகிறது. ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணியோ வெறும் 30 இடங்களுக்குள் சுருங்கி இருக்கிறது.
மக்கள் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். அதேவேளையில் மகாகட்பந்தன் கூட்டணிக்கு, அதிலும் குறிப்பாக காங்கிரஸுக்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பு ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்களின் மனநிலையுடன் பொருத்திப் பார்த்து பரந்துபட்ட பார்வையில் அலசப்பட வேண்டும் என்பதுபோல் அமைந்துள்ளது வாக்கு எண்ணிக்கை ட்ரெண்ட்.
ஒர்க் அவுட் ஆன நிமோ மேஜிக் – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும், 140+ என்ற கம்ஃபர்டபிள் தொகுதிகள் வசமாகும் என்று கூறியிருந்தாலும் 200+ என்ற இமாலய வெற்றியை யாரும் கணித்திருக்கவில்லை. இதன் பின்னணியில் ‘நிமோ மேஜிக்’ இருப்பதாகக் கணிக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
நல்லாட்சி நல்குவோம் என்று நிதிஷும், இரட்டை இன்ஜின் அரசே நல்லாட்சிக்கு வித்திடும் என்று கட்டியம் கூறிய மோடியும் இணைந்தே இந்தத் தேர்தலை வென்றெடுத்திருக்கிறார்கள். கூடவே தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், பிஹாரில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பிஹாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒரு பெண்ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைந்து சாதனை படைக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் நிதிஷ் உறுதியளித்தார். ‘நிமோ மேஜிக்’-குக்கு இந்த திட்டம் பிரம்மாண்ட உந்து சக்தியானது.
‘வாரி வழங்கிய பெண் சக்தி’ – அதன் விளைவு, பிஹார் வாக்குப்பதிவில் பெண் சக்தி பலத்தைக் காட்டியது. ஆண் வாக்காளர்களைவிட 4.3 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தனர். முதல்கட்ட வாக்குப்பதிவில் பெண்கள் வாக்கு சதவீதம் 69%, இரண்டாம் கட்டத்தில் 74%. நிதிஷ் தனது 20 ஆண்டு கால ஆட்சியில் சைக்கிள் முதல் நிதியுதவி வரை மகளிரை குறிவைத்து நிறைய திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவிட்டதே, பெண் சக்தியின் பூரண ஆசியை என்டிஏ கூட்டணிக்கு கிடைக்கச் செய்துள்ளது.
‘காங்கிரஸ் முஃப்த் பிஹார்’ – “பாஜக 2014 மக்களவைத் தேர்தல் வெற்றி தொட்டே அதன் இலக்காக முன்வைப்பது ‘காங்கிரஸ் முஃப்த் பாரத்’ (காங்கிரஸ் இல்லாத பாரதம்). அதன் அந்தக் கனவை மெய்ப்பிக்கும் விதமாக காங்கிரஸ் இல்லாத பிஹார் என்ற சொல்லும் நிலையில், வெறும் 5 இடங்களில் கூட வெல்ல முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
எஸ்ஐஆர் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் தேஜஸ்வியும், ராகுலும் ஜோடி போட்டு நடத்திய பிரம்மாண்டப் பேரணி ஏற்படுத்திய தாக்கம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போதே பிசுபிசுத்துப் போனது. அதன்பின்னர் ராகுல் காந்தி அத்தனை ஈடுபாடோடு பிஹாரில் பிரச்சாரம் செய்தாரா என்று விவாதிக்கலாம். கூட்டணி ஒற்றுமை நீர்த்துப் போவதே காங்கிரஸுக்கு காலங்காலமாக தோல்வியை தந்து கொண்டிருக்கிறது. அது மக்களவைத் தேர்தலாகட்டும், இல்லை மாநிலத் தேர்தலாகட்டும்” என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த இமாலய வாக்குப் பதிவு, பிரம்மாண்ட முன்னிலை பற்றி காங்கிரஸ் முக்கியத் தலைவர் பவன் கேரா கூறுகையில், “ஆரம்பகட்ட முன்னிலை நிலவரம் முதலே பிஹாரில் ஞானேஷ் குமார் வெற்றியைக் காட்டுகிறது. இது பாஜக; ஜேடியு – காங்; ஆர்ஜேடி இடையேயான போட்டியல்ல. பிஹார் மக்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதிரான போட்டி. அதில் ஞானேஷ் குமார் (தேர்தல் ஆணையர்) முன்னிலை பெற்று வருகிறார்” என்று எஸ்ஐஆர் திருத்ததை முன்வைத்து விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார்.
அதேபோல் சிபிஐ (எம்எல்) தலைவர் தீபாங்கர் சாட்டர்ஜியும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பிஹார் வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஊடகக் குறிப்பில் 7,45,26,858 வாக்காளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திடீரென 2 லட்சம் பேர் எக்ஸ்டராவாக வந்தது எப்படி?” என்று வினவியுள்ளார்.
காணாமல் போன ஜன்சுராஜ்: ஊருக்கெல்லாம் தேர்தல் உத்தி வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இந்தத் தேர்தலில் தடம் தெரியாமலேயே இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அந்த மாற்று நாங்கள்தான் என்றார் பிகே. ஆனால், பெயருக்குக் கூட சோபிக்கவில்லை அவரது உத்திகள். இந்தச் சூழலில் பிஹார் மாநிலத் தேர்தல் இனி அடுத்துவரும் மற்ற மாநிலத் தேர்தல்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்ற விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
