வர்த்தக பதற்றத்திற்கு மத்தியில் கனடாவில் கூடிய ஜி7 வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம்

அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடுகளுக்கு இடையே பாதுகாப்புச் செலவுகள், வர்த்தகக் கொள்கைகள், காசா பிராந்திய அமைதி முயற்சி மற்றும் ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில், ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கனடாவின் தெற்கு ஒன்டாரியோவில் ஒன்றுகூடியுள்ளனர்.
இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தலைமை தாங்கி நடத்துகிறார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
வர்த்தக அழுத்தங்கள் இருந்தாலும், பல துறைகளில் நாடுகளுக்கிடையேயான உறவு தொடர வேண்டும் என்று, ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, சவூதி அரேபியா, மெக்சிகோ, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலில், மத்திய கிழக்கில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது முக்கிய முன்னுரிமையாகக் கொள்ளப்படும் என அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கனடா நேரப்படி இன்று காலை ஜி7 அமைச்சர்கள், உக்ரைன் வெளியுறவு அமைச்சரை சந்திக்கின்றனர். இதை முன்னிட்டு உக்ரைனின் மின்சார கட்டமைப்பை சீரமைக்க 13 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 17 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கியதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த நிதி மின்சாரம், சூடாக்கும் வசதி, குடிநீர் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக பயன்படுத்தப்படும்.
குளிர்காலத்தை நெருங்கும் நிலையில் உக்ரைனைக் குளிரிலும் இருளிலும் மூழ்கடிக்க புட்டின் முயல்கிறார் என்றும், தாம் வழங்கும் உதவி உக்ரைனில் விளக்குகளையும் சூடாக்கும் வசதிகளையும் செயற்படுத்த உதவும் என்றும் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார். கனடாவும் இதேபோன்ற நிதியுதவியை சமீபத்தில் அறிவித்தது.
ஆனால் ஜி7 நாடுகளுக்கிடையிலான உறவுகள் இவ்வாண்டு சீராக இல்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுக்கு விதித்த இறக்குமதி வரிகள் காரணமாக உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜி7 கூட்டணிக்குள் பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக வர்த்தகக் கொள்கைகள் மற்றும் உலகளாவிய மோதல்களை நிறுத்தும் முயற்சிகள் குறித்த ட்ரம்பின் கோரிக்கைகள் காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது.
முக்கிய கருத்து வேறுபாடுகளில் ஒன்றாக. பாதுகாப்புச் செலவு காணப்படுகின்றது. ஜப்பானைத் தவிர மற்ற ஜி7 நாடுகள் அனைத்தும் நேட்டோவின் உறுப்பினர்கள். நேட்டோ உறுப்பினர்கள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 5% பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும் எனக் ட்ரம்ப் கோரியுள்ளார். இதனை சில நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள போதும், கனடா மற்றும் இத்தாலி போன்றவை இன்னும் அந்த இலக்கை எட்டவில்லை. கனடா 2035 ஆம் ஆண்டுக்குள் 5% இலக்கை அடையும் என அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.
Niagara-on-the-Lake பகுதியில் நடைபெறும் இந்த இருநாள் மாநாடு, கனடா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதையடுத்து நடைபெறுகின்றதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஒன்டாரியோ அரசு அமெரிக்காவில் ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக விளம்பரம் வெளியிட்டதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முடங்கின. பின்னர் கனடா பிரதமர் மார்க் கார்னி மன்னிப்பு தெரிவித்ததுடன், அமெரிக்கா தயாரானவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கத் தயாராக உள்ளோம் எனக் கூறினார்.
இதேவேளை, வர்த்தகத்தைத் தாண்டியும் பல துறைகளில் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்றும், அதற்காக தற்போது செயற்பட்டு வருவதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
