அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும் நபர் அல்லது குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக பராமரிப்பு சேவைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை வழங்கிய அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதியாகவும், பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருக்கும் தன்னைப் போன்றவர்களின் பெயரை பயன்படுத்திக் கூட அச்சமின்றி இதுபோன்ற மோசடிகளை செய்து வருகின்றனர் என கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இவ்வாறானதொரு பின்னணியில் பொது மக்கள் இலகுவாக இவ்வாறான மோசடியாளர்களின் இலக்காக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டமே இதுபோன்ற மோசடி செய்பவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வர போதுமானது.
எனக்கும், இதுபோன்ற மோசடிகளில் சிக்கிய மற்றவர்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.
மேலும், இந்த மோசடியாளர்கள் ஜனவரி 5ஆம் திகதி Zoom தொழிநுட்பம் மூலம் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அது தற்போது பரப்பப்பட்டு வருவதாகவும், அவ்வாறான பொதுக்கூட்டத்தை தானோ அல்லது தனது கட்சியோ ஏற்பாடு செய்யவில்லை” என அமைச்சர் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மேலும், தனது பெயரில் பணம் கேட்கும் இவ்வாறான மோசடியாளர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.