யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்று மாசுபாடு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் ஜனவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்து மனு வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பாக சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குப்பைகள் மற்றும் கழிவுகளை திறந்த வெளியில் எரிப்பதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதாகவும், அந்த வர்த்தமானி அறிவிப்பின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி தாபரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உண்மைகளை பரிசீலித்த அமர்வு, குறித்த திட்டத்தை உருவாக்கும் போது தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பில் கவனம் செலுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டதுடன், மனுவை மீளவும் ஜனவரி 22 ஆம் திகதி விசாரணைக்கு எத்துக்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.
