ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது
அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடம் இதன்போது வெளியிடப்பட்டது.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழுநோய் மாநாடு இன்றும் (06), நாளையும் (07) கொழும்பில் நடைபெறும்.
நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இலங்கை 1995 ஆம் ஆண்டில் தொழுநோயை ஒழித்த போதிலும் அந்தப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. தொடர்ந்தும் புதிய நோயாளிகள் அடையாளங் காணப்படுகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 – 2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் சுமார் 10% பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, 2035 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை தொழுநோய் அற்ற நாடாக மாற்ற தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நோய் பரவுவதற்கு காரணமான நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிதல், வைத்தியசாலை கட்டமைப்பால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், அங்கவீனமுற்றவர்களுக்கான முறையான புனர்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழுநோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை இந்த மாநாடு மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதில் பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சிற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதேவேளை, புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 40% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான தொழுநோயாளிகள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதோடு முறையே மட்டக்களப்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.
நிப்பொன் மன்றத்தின் தலைவரும் தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ணத் தூதுவர் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளுக்கான ஜப்பானிய அரசாங்க நல்லெண்ணத் தூதுவர் யோஹெய் சசகாவாவும் (Yohei Sasakawa) இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கே மற்றும் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் யசோமா வீரசேகர ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். தொழுநோயாளிகள் சார்பாகவும் அஜித் திசாநாயக்க உரையாற்றினார்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதிஅமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா(Akio ISOMATA), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டத்தின் குழுத் தலைவர் மொமோ தகுயுச்சி(Momoe Takeuchi), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டக் குழுத் தலைவர் வைத்தியர் விவேக் லால் உள்ளிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
