இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சந்தேகநபர்களில் 1/3 பேர் பொலிஸார்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சந்தேகநபர்களில் 1/3 பேர் பொலிஸார்
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பொலிஸார் என்பது தெரியவந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பொலிஸார்

ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30, 2025 வரை நடத்தப்பட்ட 94 தேடுதல்களில் 63 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 94 தேடுதல்களில் 37 தோல்வியடைந்த தேடுதல் நடவடிக்கையாக அமைந்ததாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கூறுகிறது.

கைது செய்யப்பட்ட 63 சந்தேகநபர்களில் 20 பேர் பொலிஸைச் சேர்ந்தவர்களாவர்.

இரண்டாவது அதிக எண்ணிக்கையில் கைதானவர்கள் நீதி அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனவும் தெரியவந்துள்ளது.

அதே காலகட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் ஆறு பொதுமகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாடுகள்

ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30, 2025 வரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,776 என, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில், 365 முறைப்பாடுகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டதோடு, 1,569 முறைப்பாடுகள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாக காணப்பட்டதாலும் விசாரிக்கப்படத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,711 ஆகும்.

இந்த காலகட்டத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் 71 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 86. இவற்றில் 25 பேர் பொலிஸ் அதிகாரிகள்.

செப்டெம்பர் 30, 2025 தரவுகளுக்கு அமைய, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 276 என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நீதவான் நீதிமன்றத்தில் 20 வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 255 வழக்குகளும் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.

Share This