தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி மரணம்

தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா பிளான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று (05) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இயந்திரத்தில் சிக்கிய உயிரிழந்தவர், மவுசாகலை தோட்டப் பிரிவை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதான கிட்ணன் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 11.00 மணியளவில் கொழுந்து அரைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 1.30 மணியளவில் இயந்திர சில்லில் குறித்த தொழிலாளியின் ஆடை (சுவட்டர்) இயந்திரத்தில் சிக்கியுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகஈ மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்
