சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் எல் பாஷர் நகரில் மனித உரிமை மீறல்கள் பெரிதும் ஏற்பட்டுள்ளதாக பல சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.சூடானில், சக்திவாய்ந்த இரு இராணுவ தலைமைகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவால் உள்நாட்டு போர் நடந்து வருவது தெரிந்ததே.
சூடானின் அதிகாரப்பூர்வ இராணுவ தலைவரான ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல் பூர்ஹான் தலைமையில் எஸ்.ஏ.எப், எனும் சூடான் ஆயுத படைகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. டர்பூரில் இனப்படுகொலை செய்த ஜன்ஜாவித் போராளிக் குழுவைச் சேர்ந்த ஜெனரல் முகமத் ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., எனும் துணை இராணுவ விரைவு படைகள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகாலமாக சர்வாதிகாரியாக இருந்த ஓமர் அல் பஷீரை, 2019ல் ஆட்சியில் இருந்து அகற்றியதில் இரு பிரிவினரும் இணைந்து முக்கிய பங்கு வகித்தமை தெரிந்ததே.
எல் – பஷாரில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிராக பாலியல் வன்முறைகள் மற்றும் கூட்டு பாலியல் வன்முறைகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆர்.எஸ்.எப்., தாக்குதலுக்கு பயந்து 36,000க்கும் மேற்பட்ட மக்கள் கால்நடையாக அருகில் உள்ள தாவிலா போன்ற நகரங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. த கார்டியன்
