கால் ஃபெரன்புக் கொழும்பில் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை – பொலிஸார்

கால் ஃபெரன்புக் கொழும்பில் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை – பொலிஸார்

பாலஸ்தீன குடிமகன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கால் ஃபெரன்புக் என்ற இஸ்ரேலிய சிப்பாய் கொழும்பில் இருப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘டெர்மினேட்டர்’ என்று அழைக்கப்படும் கால் ஃபெரன்புக், பாலஸ்தீனிய குடிமகனின் மரணத்திற்கும், உயிரிழந்தவரின் கண்ணியத்திற்கு எதிரான நடந்துகொண்டடைக்கும் பொறுப்பானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, (The Hind Rajab Foundation) அவரை கைது செய்யுமாறு இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

கடந்த ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பாலஸ்தீன குடிமகளை கொன்று, அதுகுறித்து பெருமையுடன் சிரித்துப் பேசும் காணொளியை ஃபெரன்புக் வெளியிட்டுள்ளார்” என்று ஹிந்த் ரஜப் குறிப்பிட்டுள்ளது.

ஆகையினால், இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச பொலிஸார் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறக்கட்டளை அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையிலேயே, ஃபெரன்புக் கொழும்பில் இருப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இலங்கையில் இருப்பதாகக் கூறப்படும் ஃபெரன்புக்கைக் கைது செய்ய வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்நது.

சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு இணைந்து இந்த கூட்டுப் போராட்டத்தை நடத்தியிருந்தது.

ஹிந்த் ரஜப் அறக்கட்டளையின் அறிக்கைகளைத் தவிர, இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டிய போதிலும், இந்தக் கூற்றுக்களை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Share This