இலங்கை அணியில் சுழற்சி முறையில் பயிற்சியாளர்களை பயன்படுத்த முடிவு

இலங்கை அணியில் சுழற்சி முறையில் பயிற்சியாளர்களை பயன்படுத்த முடிவு

இலங்கை அணியின் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக ஜூலியன் வூட் மற்றும் ரேன் பெர்டினன்ட்ஸ் அண்மையில் நியமிக்கப்பட்டது அந்தப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வரும் திலின கண்டம்பி மற்றும் பியல் விஜேதுங்கவின் பதவிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இலங்கை கிரிக்கெட் சபை விளக்கியுள்ளது. இந்த ஒவ்வொரு பயிற்சியாளர்களும் சுழற்சி முறையில் தேசிய அணியுடன் இணைக்கப்படுவார்கள் என்று அது கூறியுள்ளது.

‘இந்த அனைத்து பயிற்சியாளர்களும் தேசிய அணியுடன் பணியாற்றுவார்கள் என்று குறிப்பிட்டு கூற முடியது’ என்று இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ‘அவர்கள் தேசிய பயிற்சியாளர்களாக பணியாற்றுவார்கள், ஆனால் தேசிய அணியுடன் பணியாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை’ என்றும் கூறினார்.

இதன்படி எந்தப் பயிற்சியாளர்களை அணியுடன் இணைப்பது என்பது பற்றி போட்டித் தொடர்களுக்கு அமைய தீர்மானிக்கப்படும் என்று ஆஷ்லி டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சுழற்சி முறையில் பயிற்சியாளர்களை பயன்படுத்துவது சர்வதேச கிரிக்கெட்டில் வழக்கமான ஒன்றல்ல. எனினும் தென்னாபிரிக்காவில் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களான இம்ரான் கான் மற்றும் போல் அடம் ஆகியோர் தேசிய அணியுடன் அவ்வப்போது இணைக்கப்படுகின்றனர். மற்ற நேரங்களில் அவர்கள் உயர் செயல்திறன் மையத்திலேயே பணியாற்றுகின்றனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை அணிக்கு ஒரு வாரம் அதிரடி துடுப்பாட்ட பயிற்சியை வழங்கி இருந்த வூட் ஓர் ஆண்டு ஒப்பந்தத்தில் நிமிக்கப்பட்டுள்ளார். உயிரியக்கவியல் நிபுணரான பெர்டினன்ட்ஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தேசிய அகடமியில் பணியாற்றிய நிலையிலேயே இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்டம்பி 2023 டிசம்பர் தொடக்கம் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டு வருவதோடு சுழற்பந்து பயிற்சியாளரான விஜேதுங்க 2006 பெப்ரவரி தொடக்கம் இலங்கை அணியுடன் பணியாற்றி வருகிறார். எனினும் கடந்த ஜூலையில் பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி தோல்வியை சந்தித்ததை அடுத்து இருவரின் பதிவியும் கேள்விக்குரியாகி இருந்தது. எனினும் இவர்கள் இலங்கை அணியுடன் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Share This