முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி

முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி

இங்கிலாந்தை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

புதன்கிழமை குவஹாத்தியில் தங்கள் முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம் தென்னாப்பிரிக்கா வரலாறு படைத்தது.

மேலும், இறுதிப் போட்டியில் அவர்கள் இன்று (30) நவி மும்பையில் நடைபெறும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை எதிர்கொள்வார்கள்.

2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி தோல்விகளுக்குப் பின்னர், தென்னாப்பிரக்க அணி இறுதியாக ஒரு ஒருங்கிணைந்த சகலதுறை செயல்திறனுடன் போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கிண்ணத்தில் தென்னாப்பிரிக்க அணித் தலைவர் லாரா வால்வார்ட்டின் முதல் சதமும், மாரிசேன் காப்பின் சகலதுறை செயல்திறனும் இந்த அபார வெற்றியை சிறப்பித்தன.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா, அணித் தலைவர் லாரா வால்வார்ட்டின் 143 பந்துகளில் 169 ஓட்டங்கள் என்ற வலுவான பங்களிப்பினால் 50 ஓவர்கள் நிறைவில் 319 ஓட்டங்களை எடுத்தது.

தனது இன்னிங்ஸில் லாரா வால்வார்ட்டின் 20 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களை அடித்தார்.

அவர் 115 பந்துகளில் தனது 10 ஆவது ஒருநாள் சதத்தை எட்டியதுடன், அடுத்த 69 ஓட்டங்களுக்கு அவருக்கு 28 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன.

நடுத்தர ஓவர்களில் தென்னாப்பிரிக்கா முக்கிய விக்கெட்டுகளை இழந்த போதிலும், அவர் சிறப்பாக செயற்பட்டார்.

அவருக்கு அடுத்தபடியாக டாஸ்மின் பிரிட்ஸ் (45), மாரிசேன் காப் (42) மற்றும் குளோ ட்ரையன் (33*) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரக்க அணிக்காக மகத்தான பங்களிப்பை வழங்கினர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில், சோஃபி எக்லெஸ்டோன் (4/44) தனித்து நின்றார்.

மேலும், லாரன் பெல் (2/55) மற்றும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் (1/67) ஆகியோர் தம்மால் முடிந்த ஆதரவை வழங்கினர்.

இருப்பினும், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் முக்கியமான ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

இதனால், தென்னாப்பிரிக்கா தாமதமாக சிறப்பாக விளையாடி ஒரு வலுவான இலக்கினை நிர்ணயித்தது.

320 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணிக்காக நாட் ஸ்கைவர்-பிரண்ட் அதிகபட்சமாக 64 ஓட்டங்களை எடுத்தார்.

அத்துடன், ஆலிஸ் கேப்சி (50) மற்றும் டேனி வயட்-ஹாட்ஜ் (34) ஆகியோரும் சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருக்க போராடினர்.

எனினும், துடுப்பாட்ட வரிசையில் ஏனைய வீரர்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தவறிவிட்டனர்.

இதனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 42.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கா அணிக்காக மாரிசேன் காப் (5/20) அற்புதமான பந்துவீச்சுடன் முன்னிலை வகித்தார்.

இது இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் முதுகெலும்பை உடைத்தது.

அவருக்கு அடுத்தபடியாக நாடின் டி கிளார்க் (2/24) இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அயபோங்கா காகா, நோன்குலுலேகோ மிலாபா மற்றும் சுனே லூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகியாக லாரா வால்வார்ட் தெரிவானார்.

Share This