இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரம்!! குவாட் மாநாடு அடுத்த ஆண்டில் நடைபெறுமா?

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்கா – இந்திய அரசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குவாட் (QUAD) இராணுவ கூட்டமைப்பின் உயர்மட்ட மாநாடு 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் டிசம்பர் மாதம் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், குவாட் மாநாட்டை அடுத்த ஆண்டு முற்பகுதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோனி அப்பானீஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாநாடு நடைபெறும் என்பதை அந்தோனி அப்பானீஸ் உறுதியாகக் கூறவில்லை.
குவாட் இராணுவ அணியில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக் கூட்டணியை 2017 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய வடிவில் மீள் உருவாக்கம் செய்திருந்தார்.
இந்த இராணுவ கூட்டணியின் ஆரம்பத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த இந்தியா, பின்னர் இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவாகரத்தில் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவை மையப்படுத்தி இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் அக்யுஸ் எனப்படும் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை அமெரிக்கா உருவாக்கியிருந்தது.
இந்த அமைப்பில் பிரான்ஸ் நாடும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் கூடவுள்ள குவாட் இராணுவ கூட்டணியின் மாநாட்டில் இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் அக்கியுஸ் எனப்படும் பாதுகாப்பு கூட்டணியின் செயற்பாடுகளையும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்க அமெரிக்கா ஏற்பாடு செய்வதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன
சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஆசியான் (ASEAN) மாநாட்டில் பேசிய அவுஸ்ரேலிய பிரதமர் அல்பானீஸ், பாதுகாப்பு – தொழில்நுட்பம் – பொருளாதாரப் பிரச்சினைகளில் இந்தோ – பசுபிக் பிராந்திய ஸ்திரத்தன்மை, ஒத்துழைப்பைப் பராமரிப்பதில் குவாட்டின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியதாக ஏஎன்ஐ (aninews) செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
