பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன – சாகர காரியவசம்

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன – சாகர காரியவசம்

‘மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகின்றார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,”பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. நாட்டுக்கு சேவையாற்றிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள், மோசடியாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டார்கள்.

தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கியது. பொதுத்தேர்தலில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தமது தவறான அரசியல் தீர்மானத்தை உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் விளங்கிக்கொண்டார்கள்.

பொதுத் தேர்தலில் 61 சதவீத வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 23 இலட்ச வாக்குகளை இழந்து 43 சதவீத வாக்குகளை பெற்றது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதை நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டார்கள்.

நாட்டுமக்களினதும், அரசியல்வாதிகளினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகின்றார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதை பொலிஸ்மா அதிபர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதுவும் நிலையற்றது. ஆட்சி மாற்றம் ஏற்படலாம். சட்டவிரோதமான முறையில் செயற்பட்டால் அதற்கு சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும்” என்றார்.

Share This