லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன.
இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அங்கு பிற்பகல் வரை அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இறுதிச் சடங்குகளுக்காக உடல் குடும்ப மயானத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லசந்த விக்ரமசேகரவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏராளாமானோர் நேற்று வருகைதந்திருந்தனர்.
கடந்த 22ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது அலுவலகத்திற்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் குறித்து தற்போது நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, பாதுகாப்பு கெமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
