போதைப்பொருள், சிறு கத்தியுடன் கைதான இளைஞன் – படையினர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
நல்லூர், அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஐஸ் மற்றும் சிறிய ரக கத்தியுடன் யாழ்ப்பாண பொலிஸார் நேற்றுமுன்தினம் (22) புதன்கிழமை இரவு கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் எனவும், குறித்த இளைஞன் தன்னை கைதில் இருந்து விடுவிக்க சுமார் ரூ. 20 இலட்ச ரூபாவை பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (23) நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை (25) வரை பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்டபோது பொலிஸ் புலனாய்வாளர் சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றுள்ளனர். இருப்பினும் குறித்த பொலிஸ் புலனாய்வாளர் அந்த இலஞ்சத்தை வாங்காமல் கடமையை நேர்த்தியாக செய்ததனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வட மாகாணத்தில் போதைப்பொருள் விநியோகிப்பவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் ஆதரவு கிடைப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
போதைப்பொருள் கடத்தல் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவரது கட்சியைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினரின் மகனான சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
