ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை – தேஜஸ்வி யாதவ்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 143 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டது.
அதேபோன்று, கூட்டணி கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
ஐக்கிய ஜனதாதளம், பாஜக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முறையாக முடிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இரு கூட்டணியினரும், சுயேட்சைகளும், ஏனைய கட்சியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.