மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் புனரமைப்பு – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் இராசையா நளினி தலைமையிலான பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் கண்காணிப்பு பயணத்தை தொடர்ந்து குத்துப்பாலம் புனரமைப்புக்கு மாகாண சபையின் நிதி பிரதேச சபைக்கு விடுவிக்கப்பட்டு அது புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அதனை நிரந்தரமாக புனரமைக்கவேண்டும் என்ற நிலைப்பாடு சபையின் தவிசாளரால் முன்வைக்கப்பட்டது. அதற்கான கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமானம் மிகக் குறைவு எனவும், சபையின் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே மிகவும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.
வருமான அதிகரிப்புக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதுவரையில் கிராமங்களுக்கு ஒரு வீதியாவது புனரமைப்புச் செய்து தரப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் மாகாண சபையால் நிதி வழங்கப்பட்டபோதும் இலங்கை மின்சார சபை அனுமதி வழங்காமையால் வீதி மின் விளக்குகள் பொருத்துவதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர். யானைகளால் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலையில் பிரதான சந்திகளில் வீதி மின் விளக்குகள் அவசியம் என்றும் ஆளுநரிடம் எடுத்துக்கூறினர். இது தொடர்பில் மின்சார சபையுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் பதிலளித்தார்.
மேலும், சபையின் தேவைப்பாடுகள் – நிர்வாக விடயங்கள் என்பன தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.