பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

டாக்காவின் மிர்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நண்பகலில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.

எனினும், அருகிலுள்ள ஒரு இரசாயனக் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இரசாயனக் கிடங்கில் ப்ளீச்சிங் பவுடர், பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களில் எந்த கட்டிடம் முதலில் தீப்பிடித்தது என்பதை தீயணைப்பு சேவை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்கள் “அதிக நச்சு வாயுவை” சுவாசித்த பின்னர் உயிரிழந்திருக்கலாம் என தீயணைப்பு சேவை இயக்குநர் முகமது தாஜுல் இஸ்லாம் சவுத்ரி  தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை மற்றும் இரசாயன கிடங்கின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இரசாயன கிடங்கு சட்டப்பூர்வமாக இயங்கி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This