மத்திய கிழக்கின் வரலாற்று விடியல் – இஸ்ரேல் பாராளுமன்றில் ட்ரம்ப் உரை

இஸ்ரேல் – காசா இடையிலான போர் முடிவு மட்டுமல்ல புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல் என்றும் அமெரிக்காவை போன்று, இஸ்ரேலுக்கு பொற்காலம் ஏற்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இஸ்ரேல்- காசா இடையிலான ஒப்பந்தம் மூலம் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பல வருட இடைவிடாத போர் மற்றும் முடிவில்லா ஆபத்துக்குப் பிறகு, இன்று வானம் அமைதியாக இருக்கிறது, துப்பாக்கிகள் அமைதியாக இருக்கின்றன, சைரன்கள் அமைதியாக இருக்கின்றன. இறுதியாக அமைதியான ஒரு புனித பூமியில் சூரியன் உதிக்கிறது.
அமைதி ஒப்பந்தம் மூலமாக நம்முடைய நேரத்தை நாம் வீணடிப்பதாக ஏராளமானோர் தெரிவித்தனர். ஆனால், நாம் இந்த சாதனையை எட்டியதற்காக பல சிறந்த அமெரிக்க தேசப்பற்றாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
8 மாதங்களில் 8 போரை நிறுத்தும்போது, போர்களை விரும்பவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். நான் மிகவும் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறேன் என எல்லோரும் நினைத்தனர்.
நான் எல்லோருடன் போருக்கு சென்று கொண்டிருப்பதாகவும், நான் போருக்கு செல்லும் ஆளுமை கொண்டவராகவும் இருப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியதை நினைவூட்டுகிறேன் ஆனால், என்னுடைய ஆளுமை போரை நிறுத்தவது பற்றியது என நினைக்கிறேன்” என்றார்.
இதேவேளை, காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததற்காகவும், இஸ்ரேலுக்கு நீண்டகாலமாக அளித்து வரும் ஆதரவிற்காகவும் ட்ரம்ப் இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் கௌரவத்தைப் பெறுவார் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.