போதைப் பொருள் கடத்தல்!!! இலங்கையர் உள்ளிட்ட மூவர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது

போதைப் பொருளுடன் இலங்கையர் உள்ளிட்ட மூவர் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 45.4 கிலோ ஹைட்ரோ கஞ்சா மற்றும் ஆறு கிலோ சைலோசைபின் காளான்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) பறிமுதல் செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஷிவ் குமார் (இலங்கையைச் சேர்ந்தவர்), யூசுப் பிஹாரி மற்றும் ஷாகுல் ஹமீது (இந்தியாவைச் சேர்ந்தவர்) ஆவர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 50 கோடி ரூபா என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் பெங்களூரு மண்டல பிரிவின் அறிக்கையின்படி, தாய்லாந்தில் இருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள போதைப்பொருள் கும்பல்கள் பற்றிய தகவல்களை பணியகம் சேகரித்துள்ளது.
இதன் விளைவாக கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த யூசுப் மற்றும் ஷாகுல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 31.4 கிலோ ஹைட்ரோ கஞ்சா மற்றும் 4 கிலோ சைலோசைபின் காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, ஷிவ் குமார் வேறொரு விமானத்தில் வருவதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். அவர் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 250 உணவு டின்களில் போதைப்பொருட்களை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.