‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

39 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்தியதற்காக “தொட்டலங்க கண்ணா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (10) அவரைக் கைது செய்து உடனடியாக தண்டனையை நிறைவேற்றுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில், கணபதி கணேஷ் எனப்படும் தொட்டாலங்க கண்ணா மீது 2014 டிசம்பர் 26 ஆம் திகதி சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

விசாரணையின் போது பிணை வழங்கப்பட்ட பிரதிவாதி நீதிமன்றத்தை தவிர்த்து வந்த நிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )