காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்கின்றோம்

காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்கின்றோம்

காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் பணிப்புரைவிடுத்தார்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்திற்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (10) மாலை நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “பொலிஸாரின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் ஆனாலும் இன்னமும் சில பொலிஸ் நிலையங்களில் மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுகின்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார். மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பில் ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டது. பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸார் கடமையிலுள்ளபோதும் வீதிகளில் நெரிசல் காணப்படுவதாகத் தெரிவித்த ஆளுநர், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று பாடசாலைகளுக்கு அண்மையாக வீதிகளில் கனரக வாகனங்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் பிரதான வீதிகளின் கரையோரங்களில் வாகனங்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார். பொலிஸாரின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே இவற்றைக் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பாடசாலை நேரங்களில் சமிக்ஞையைக் கவனியாது பெற்றோர் மாணவர்களுடன் பயணிக்கின்றனர் என்று குறிப்பிட்ட ஆளுநர் இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தானவை என்பதால் பொலிஸார் பாடசாலை நேரங்களில் இத்தகைய இடங்களில் கட்டாயம் கடமைகளில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வீதிகளில் இரவு நேரங்களில் குப்பை போடுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்பை கோருகின்றமை தொடர்பாக ஆளுநர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார். சுற்றாடல் பொலிஸாருடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பணியாளர்களையும் ஈடுபடுத்த தயாராக இருப்பதாகவும், குப்பைகள் அடிக்கடி போடப்படும் பிரதேசங்களை இனங்கண்டு அந்தப் பகுதிகளில் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என ஆளுநர் வலியுறுத்தினார்.

இதேநேரம், புகைப்பிடித்தல் பொருட்கள் விற்பனையை பகிரங்கமாக விளம்பரப்படுத்த முடியாத நிலையில், சங்கேத குறியீடுகளை வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டிய ஆளுநர் அது தொடர்பான ஆதாரங்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

இதன் பின்னர் ஒவ்வொரு மாவட்ட செயலர்களாலும் தத்தமது மாவட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில், பெண் பொலிஸாரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட பொலிஸார் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலர், அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விபரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார். கால்நடைகள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு மண்டைத்தீவு சந்தி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரணங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஒலிபெருக்கி பாவனைக்கான கட்டணம் பொலிஸார் அறவிடுகின்றமையால் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளது எனக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாக மாவட்டச் செயலர் குறிப்பிட்டார். கல்லாறை அண்மித்து காட்டை அழித்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார். அங்கு அகழப்படும் மண்ணை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் இடத்திற்கு கொண்டு வரப்படும் பாதையில் பொலிஸ் காவலரண் அமைப்பதன் ஊடாக இதனைத் தடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கௌதாரிமுனை கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு இளையோர் வருவதாகவும் அங்கு மதுபானம் அருந்தி விட்டு முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்ட மாவட்டச் செயலர் பொலிஸ் காவலரண் அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வில் ஒரு கிராமமே ஈடுபடுகின்றது என்றும் அங்கு சென்று கைது செய்து வருவதே பொலிஸாருக்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சட்டவிரோத மணல் கடத்தலை தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும், அப்படிச் செய்பவர்கள் பொலிஸாருக்கு கூட பணம் கொடுத்து அதனைச் செய்கின்றமையும் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தனது தலைமையில் விசேட குழு அமைத்து இதற்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 3 மாதங்களுக்குள் 130 டிப்பர்களை பிடித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கசிப்பு உற்பத்தி தொடர்பான விவகாரத்தில் பொலிஸாரை விட மதுவரித் திணைக்களத்தினருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் இந்த விடயத்தில் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இதேநேரம், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பது அரச நிறுவனம் என்பது பல பொலிஸாருக்குத் தெரிவதில்லை என அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார். அத்துடன் அதிகார சபை சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கின்றபோது அதனால் நடவடிக்கைக்கு உள்ளாக்கும் தரப்பு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தால், பொலிஸார் அதிகார சபையையும் விசாரணைக்கு அழைத்து அதிகார சபையை மலினப்படுத்துகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் மண்ணெண்ணையில் இயங்குகின்றன என்றும் அதனை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார். பொலிஸார் அவ்வாறான பேருந்துகள் தொடர்பில் அறியத் தந்தால் அவர்கள் டீசலுக்கு மாறும் வரை அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாகக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இத்தகைய கலந்துரையாடல்கள் அவசியம் என்று குறிப்பிட்டதுடன், இதன் ஊடாக பெருமளவு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் எனத் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share This