ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி – நிசாம் காரியப்பர் கூறுவதென்ன?

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்நிலை நியமனக் குழுவில் தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது இவ்விடயத்தை ரவீ செனவிரத்ன தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை நாம் அடையாளம் கண்டுள்ளோம்” என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை உறுதிப்படுத்தும் போது ரவி செனவிரத்ன தெரிவித்ததாக நிசாம் காரியப்பர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் பல சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியமை தொடர்பில் தற்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வவுணதீவு தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் ரவீ செனவிரத்ன இதன்போது தெளிவுபடுத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.