கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

புளூம்பெர்க் குறியீட்டின்படி, ரொனால்டோவின் நிகரமதிப்பு 1.4 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், கால்பந்து வரலாற்றில் பில்லியனர் ஆன முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சவுதி கழகமான அல்-நஸ்ரில் அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம், நைக் போன்ற உலகளாவிய விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் அவரது CR7வணிகம் ஆகியவற்றின் மூலம் ரொனால்டோ இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.

2002ஆம் ஆண்டு முதல் 2023 வரை ரொனால்டோ 550 மில்லியன் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது.

இந்த காலப்பகுதியில் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் உள்ளிட்ட சில சிறந்த ஐரோப்பிய கழகங்களுக்காக அவர் விளையாடியிருந்தார்.

2023ஆம் ஆண்டில், ரொனால்டோ சவுதி கழகமான அல்-நாசருக்குச் சென்றதன் மூலம் அவருக்கு ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் டொலர் வரி இல்லாத சம்பளம் மற்றும் போனஸ்கள் கிடைத்தன.

அந்த அணியுடனான ஒப்பந்தம் 2025 ஜூன் மாதம் முடிவடைய இருந்த நிலையில், அணியுடனான ஒப்பந்தத்தை ரொனால்டோ மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன்மூலம் அவர் 400 மில்லியன் டொலருக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும், உலகின் மிகப்பெரிய பணக்காரர் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் இல்லை.

தாய்லாந்தில் உள்ள ராட்சபுரி எஃப்சிக்காக விங்கராக விளையாடி வரும் ஃபைக் போல்கியா, தற்போது உலகின் மிகப்பெரிய பணக்கார வீரராக உள்ளார்.

அவர், 2014 முதல் புருனே தேசிய அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் அந்த அணியின் தலைவராகவும் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் ஆகும்.

புருனே அரச குடும்பத்தைச் சேர்ந்த அவரது சொத்து மதிப்பு அரச பரம்பரையில் இருந்து வருகிறது. இரண்டாது இடத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.

உலகின் மற்றொரு மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும், அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, தற்போது 650 மில்லியன் டொலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நான்காவது இடத்தை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவானாகக் கருதப்படும் டேவிட் பெக்காம் உள்ளார். அவரின் நிகர மதிப்பு 450 மில்லியன் டொலர்கள் ஆகும்.

Share This