இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை?

நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார்.
“நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நடவடிக்கை இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சுற்றுலாத் துறையின் நலனுக்காக இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.”
“அமெரிக்காவில் பென்டகனுக்கு மேலே கூட விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுகிறது.
அப்படியானால், நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்?” என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மரிக்கார் எம்.பி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய உறுப்பினர் மரிக்கார் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.