மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர்

மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர்

மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கு மானியம் வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், இயந்திர மீன்பிடி படகுகளுக்காக இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை வழங்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் செல்வம் அடைக்கலநாதன் எம்பி சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எரிபொருள் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களுக்கு மேலும் எரிபொருள் மானியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டீசல் படகுகளுக்கு 06 மாதங்களுக்காக அதிகபட்சம் 3 இலட்சம் ரூபா வழங்கப்படும்.மண்ணெண்ணெய் படகுகளுக்கு 06 மாதங்களுக்கு 9375 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.’வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின்படி, மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுத்து வருகிறது.

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியங்கள் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளூர் மீன்பிடித் துறையில் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் 5750 படகுகளும் மண்ணெண்ணெயை பயன்படுத்தும் 27530 படகுகளும் காணப்படுகின்றன.அத்துடன் எரிபொருள் பயன்படுத்தப்படாத 17000 சிறிய படகுகளும் உள்ளன.

இந்நிலையில் மீன்பிடித் துறையில் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் ‘’வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என அரசாங்கத்தின் கொள்கை யின்படி மீனவர் சமுகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மக்கள் எரிபொருள் விலையேற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எரிபொருள் விலைகளை பெருமளவில் குறைத்துள்ளோம்.

அதேவேளை மாதாந்த எரிபொருள் விலை நிர்ணயத்திற்கமைய மேலும் எரிபொருள் மானியத்தை வழங்கும் கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றன.மேலும் வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான பெருமளவு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும்அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை, நுண்நிதி கடன்களால் மீன்பிடி சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளனர். பெண்களே அதிகளவில் இதில் சிக்கியுள்ளனர். வன்னி மாவட்டத்திலேயே அதிகளவான பெண்கள் நுண்நிதி கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

Share This