சனத் வீரசிங்கவுக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை

“கைது செய்யப்பட்டுள்ள ‘பெலியத்த சனா’ எனப்படும் சனத் வீரசிங்கவுக்கும், அரசாங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. விமல் வீரவன்ச கூறுவது உண்மையென்றால் அவர் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் சாட்சி கட்டளை சட்டத்துக்கமைய அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
நேற்று (06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “கைது செய்யப்பட்டுள்ள ‘பெலியத்த சனா’ எனப்படும் சனத் வீரசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம். அவருக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அவருக்கு அரசாங்கம் எந்த வகையில் ஒத்துழைப்பு வழங்குகிறது? நீர்கொழும்பில் இடம்பெற்றதை போன்று, அரசாங்கத்திலுள்ள எவரும் சென்று பெலியத்த சனாவை கட்டியணைத்துக் கொள்ளவில்லை.
அரசாங்கம் அவரைப் பாதுகாப்பதாக எவராலும் குற்றஞ்சாட்ட முடியும். ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாப்பதில்லை. அவர்களுக்கெதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். தமக்கான பேசுபொருளொன்று இல்லாதிருக்கும் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற போலி செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
கூறப்படும் பொய்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் நாம் பதிலளித்துக் கொண்டிருக்கின்றோம். அண்மையில் ஜனாதிபதியை பற்றி அவதூறு பரப்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருக்கின்றார். அதேபோன்று தான் தற்போது பிரிதொருவர் பெலியத்த சனா தொடர்பில் கூறியிருக்கின்றார்.
அவர் கூறுவது உண்மையெனில் அதனை அவர் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இது தொடர்பில் தங்காலை பொலிஸாரால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர் முன்வைத்த குற்றச்சாட்டை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முற்றாக மறுக்கின்றோம். நாம் சாட்சி கட்டளை சட்டத்துக்கு அர்த்தமுள்ளதாக்குகின்றோம். அந்த சட்டத்துக்கமைய எவரும் பொய் கூற முடியாது.
புதிய ஊழல், ஒழிப்பு சட்டத்துக்கமைய எவருக்கும் தகவல் வழங்க முடியும். ஆனால் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், பழிவாங்கலுக்காகவும் பொய்யான தகவல்களை வழங்க முடியாது. எனவே பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராகவும், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கெதிராகவும் இந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெலியத்த சனாவின் இல்லத்துக்கு யார் யார் எப்போது சென்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்கள் இருந்தால், அவற்றை வீரரைப் போன்று சென்று தங்காலை பொலிஸாரிடம் வழங்க முடியுமல்லவா? எனவே அதனை செய்யுமாறு வீரவன்சவிடம் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.