மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், 1975 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியில் இடம் பிடித்தவருமான பெர்னார்ட் ஜூலியன் காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 75 ஆகும். அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

தனது 18வது வயதில் டிரினிடாட்&டொபாகோ அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமான ஜூலியன், 1973 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இரண்டு சதங்கள், மூன்று அரை சதங்கள் என 30.92 சராசரியில் 866 ஓட்டங்களை குவித்துள்ளார்.

பந்து வீச்சில் 2.46 என்ற எகானமியில் 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 12 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 14.33 சராசரியில் 86 ஓட்டங்களையும், 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

1975ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

எனினும், 1977 கெர்ரி பாக்கர் உலகத் தொடர் போட்டியில் பங்கேற்ற பின்னர், கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த பெர்னார்ட் ஜூலியனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், பெர்னார்ட் ஜூலியனிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Share This