அதிகபட்ச செயற்பாட்டு திறனை எட்டியது கட்டுநாயக்க விமான நிலையம்!

கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) தற்போது அதன் திட்டமிட்ட கொள்ளளவை விட அதிகமாக இயங்குகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குளிர்காலத்திற்காக வாரத்திற்கு கூடுதல் விமான இடங்களுக்கான சுமார் 40 புதிய கோரிக்கைகள் வந்துள்ளன.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே குறைந்த இடவசதி காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுற்றுலா துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2025 அக்டோபர் இரண்டாம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலாத் தலைவர்கள் உச்சி மாநாடு 2025இல் பேசிய துணை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
திட்டமிடப்பட்ட விமான நடவடிக்கைகள் மற்றும் வாடகை விமானங்களுக்கான இந்த கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றில், ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டுமே மத்தள விமான நிலையத்தை மாற்று விமான நிலையமாகத் தேர்ந்தெடுத்துள்ளன, ஆனால் பல விமான நிறுவனங்கள் வாய்ப்புகள் இல்லாததால் அந்த யோசனையை கைவிட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஆரம்பத்தில் ஆண்டுக்கு ஆறு மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது, ஆனால் தற்போது ஆண்டுக்கு 10 மில்லியன் பயணிகளை கையாள்வதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இந்நிலையில், நீண்ட காலமாக தாமதமாகி வரும் விமான நிலைய விரிவாக்க பணிகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் ஆறு தசாப்தங்களாக விமான நடவடிக்கைகளை எளிதாக்கி வரும் கட்டுநாயக்க விமான நிலையம், தற்போது இரண்டு ஓடுபாதைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் சவால்களை நிவர்த்தி செய்வது ஒரு முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விமான நிலைய செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைவதில் சுற்றுலாத் துறையும் நேரடி சவால்களை எதிர்கொள்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.7 மில்லியனை கடந்துள்ளமை குறிப்பித்தக்கது.