கிரிப்டோகரன்சி குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

‘கிரிப்டோகரன்சி’யை எவ்வாறு தொடரலாம் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுக்க உயர்மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அரசாங்கமும் இதற்கு ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்கு செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிப்டோகரன்சிகளை இலங்கை எவ்வாறு தொடரும் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான பரிந்துரைகளைப் பெறுவதே முன்மொழியப்பட்ட குழுவின் நோக்கமாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க அமைச்சர்கள் சமர்ப்பித்த சொத்து அறிவிப்புகளிலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் குறிப்பிடப்படுவதால், சமீபத்திய நாட்களில் ‘கிரிப்டோகரன்சி’ குறித்த பேச்சுக்கள் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இது தொடர்பாக தற்போது எந்த சட்டமும் இல்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.