ஹமாஸுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இல்லையென்றால், இதுவரை இல்லாத பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார்.
அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப், நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இதற்கு நேதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது
காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் கூறியதாவது:
ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (5-ம் திகதி) மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.