நீதியே நிலைமாறுகால நீதியின் அடிப்படை – இலங்கையின் ஆளும், எதிர் தரப்புகளுக்கு வழங்கப்பட்ட செய்தி

நிலைமாறுகால நீதியின் அடிப்படை நீதியே எனவும், நீதி நிலைநாட்டப்படாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பொறுப்பதிகாரி ரொரி மன்கோவன் இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்த்தரப்புப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை – சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த 14 – 21 ஆம் திகதி வரை
சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பொறுப்பதிகாரி ரொரி மன்கோவனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது நிலைமாறுகால நீதியின் அடிப்படை நீதியே எனவும், நீதி நிலைநாட்டப்படாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை எனவும் ரொரி மன்கோவன் இலங்கைப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு நீதி உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்துவோம் எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை என விசனம் வெளியிட்டார்.
அதேபோன்று நீதியை நிலைநாட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாகவும், அதில் முன்னேற்றங்கள் எட்டப்படாவிடின் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கான ஆணையை தமக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை வழங்கியிருப்பதாகவும் ரொரி மன்கோவன் தெரிவித்தார்.
அதற்கமைய தாம் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறை உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இருப்பினும் அவை இலங்கையின் முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடையூறாக அமையாது எனவும் அவர் உறுதியளித்தார்.