அநுரவின் உரைக்கு தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பு

அநுரவின் உரைக்கு தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பு

தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் எனக்கூறி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி, இப்போது ஐ.நா பொதுச்சபை உள்ளிட்ட சர்வதேச களங்களில் நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்ற தோரணையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் புதன்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, ஊழல் ஒழிப்பு, காஸா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசிய போதிலும், தமிழர் இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதியின் இவ்வுரை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எந்த சிங்களத் தலைவர்கள் ஆட்சிப்பீடமேறினாலும் தமிழர்கள் ஏமாளிகளாகவே இருக்கவேண்டும் என்பதையே அவரது உரை புலப்படுத்தியிருப்பதாகவும், ‘தமிழர்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தற்போதைய அரசாங்கம் தயாரில்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கடந்தகால நாடாளுமன்ற உரைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதே நிலைப்பாட்டையே இப்போது ஐ.நா பொதுச் சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் அரசாங்கம் எடுத்துரைத்து வருகின்றது. அதுமாத்திரமன்றி சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து தமிழர்கள் நடாத்திய உரிமைப் போராட்டத்தை மலினப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளே தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிங்கள பௌத்தர்களாகிய தாமே இந்நாட்டின் உரித்தாளர்கள் எனவும், தமிழர்கள் தமக்கு அடிமைகளே எனவும் சிந்திக்கும் எண்ணப்போக்கு இங்கு மேலோங்கியிருக்கிறது. இதனை சீரமைப்பதற்கு சிங்கள மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். இருப்பினும் இப்படியான ஆட்சியாளர்களின் கீழ் அம் மாற்றம் ஒருபோதும் ஏற்படாது’ எனவும் தெரிவித்துள்ள அவர்கள்,

புதிய அரசாங்கம் அவர்கள் செல்லும் சகல இடங்களிலும் இலங்கையில் இனப் பிரச்சினை இல்லை எனவும், பொருளாதாரப் பிரச்சினையே இருக்கிறது எனவும் கூறிவருவதைப் பார்க்க முடிகின்றது. மாறாக தமிழினப் படுகொலை குறித்தோ அல்லது நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்தோ எங்கும் அரசாங்கம் அதன் ஈடுபாட்டைக் காண்பிக்கவில்லை. தமிழினப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்காததுடன் மாத்திரமன்றி காணி சுவீகரிப்பு உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் வெறுமனே வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன. அவை செயல்வடிவம் பெறவில்லை.

அத்தோடு காஸாவில் இடம்பெற்றுவருவது இனவழிப்பு என்பதை ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் பகிரங்கமாகவே கூறிவரும் நிலையில், அவ்விடயத்தைக்கூட ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படையாகக் கூறவில்லை. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இந்த அரசாங்கம் எதிர்மறைப்போக்கில் பயணிக்கிறதே தவிர, எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This